டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல்ரவுண்டராக உருவெடுத்த தீபக் சாஹருக்கு தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள தீபக் சாஹர், வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலககோப்பை தொடரிலும் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் தீபக் சாஹர் சென்றால் என்ன. ஐபிஎல் மூலம் இந்தியா ஒரு தங்கத்தையும், ஒரு வைரத்தையும் கண்டு எடுத்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் மூலம் தனது திறமையால் டேவிட் வார்னரையே மிரள வைத்தவர் தமிழக வீரர் நடராஜன். இதனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு டி20 உலககோப்பைக்கான பிளானில் நடராஜன் இருந்த நிலையில், கரோனா, காயம் காரணமாக தடைப்பட்டது.
தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நடராஜன், ஐபிஎல் சீசனில் பழைய ஃபார்மை வெளிக்காட்டியுள்ளார். தனது வழக்கமான யாக்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் நடராஜன், சில போட்டிகளிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் பும்ரா ஒரு பக்கமும், நடராஜன் மறு பக்கமும் என இந்திய அணி பந்துவீச்சில் கெத்து காட்ட உள்ளது.
இதே போன்று இந்திய அணி கண்டு எடுத்துள்ள மற்றொரு தங்கம், காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக். அனல் பறக்க பந்துவீசுவதால், பேட்ஸ்மேன்கள் இவரை எதிர்கொள்ள திணறுகின்றனர். ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் உம்ரான் மாலிக் களமிறங்கினால் எதிரணியை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
இதே போன்று ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணாவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஏற்கனவே முகமது ஷமி, புவனேஸ்வர் குமாரும் அசத்தி வருகின்றனர். டி20 உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியா உள்ள டி20 போட்டிகளில் இந்த பந்துவீச்சு அட்டாக்கை பயன்படுத்தி, அவர்களுக்கு அனுபவத்தை திரட்டி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் இந்திய வேகப்பந்துவீச்சுக்கு இனி நல்ல காலம் தான்.