யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!

Updated: Fri, Dec 15 2023 21:12 IST
யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா! (Image Source: Google)

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் யு19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முன்னேறின.

இதில் ஐக்கிய அரபு அமீரகம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியும், இந்தியா – வங்கதேசம் இடையேயான 2ஆவது அரையிறுதி சுற்றும் துபாயில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ரஹ்மான் ரப்பி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்பின் இந்திய அணி தரப்பில் ஆதார்ஷ் சிங் – குல்கர்னி கூட்டணி களமிறங்கியது. இதில் 2ஆவது பந்திலேயே ஆதார்ஷ் சிங் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான குல்கர்னி 1 ரன்னிலும், கேப்டன் சஹரன் டக் அவுட்டிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் ஸ்கோர் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த வீரர்களில் சச்சின் தாஸ் 16 ரன்களிலும், பிரியங்ஷூ மோலியா 19 ரன்களிலும், அவனிஷ் டக் அவுட்டானதால், 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதன்பின் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான முஷிர் கான் – முருகன் அபிஷேக் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முஷிர் கான் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு வீரரான முருகன் அபிஷேக் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 42.4 ஓவர்களில் 188 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அரிஃபுல் இஸ்லாம் – அமின் கூட்டணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் இருவரும் இணைந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்திய பவுலர்காள் இவர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். 

இறுதியில் இஸ்லாம் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து முகமது 9 ரன்களிலுஇம், அமின் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் வங்கதேச அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இதன் மூலம் வங்கதேச யு19 அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய யு19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் யு19 ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய யு19 அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை