யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: பாகிஸ்தான் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியை எதிர்த்து பாகிஸ்தான் அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஷாஜாய்ப் கான் 4 ரன்களுக்கும், ஷாமில் ஹுசைன் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அஸான் அவாய்ஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சாத் பைக் 03, அஹ்மத் ஹசன் 04, ஹாரூன் அர்ஷத் 08 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அஸான் - அராஃபத் மின்ஹாஸ் இணை தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். பின் அஸான் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 52 ரன்கள் எடுத்த நிலையில் அராஃபதும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இவர்களைத்தொடர்ந்து வந்த உபைத் ஷாவும் 6 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அந்த அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி சாம் கான்ஸ்டாஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 4, ஹர்ஜாஸ் சிங் 5, ரியாக் ஹிக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஹாரி டிக்ஸன் - ஆலிவர் பீக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஹாரிக் டிக்ஸன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி டிக்ஸன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆலிவர் பீக் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய டாம் காம்பெல்லும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்ன களமிறங்கிய ராஃப் மேக்மில்லன் ஒருபக்கம் நின்று விளையாட, மறுமுனையில் களமிறங்கிய டாம் டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 164 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு ஆட்டத்தில் தொற்றிக்கொண்டது.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஃப் மெக்மில்லன் 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண்டர்19 அணி 49.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அண்டர் 19அணியை வீழ்த்தி திர்ல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதன்மூலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.