ஆஃப்கானிஸ்தான் அணியில் இணையும் பாகிஸ்தான் ஜாம்பவான்!
சர்வதேச கிரிக்கெட்டில் மிக பலம் வாய்ந்த அணிகளாக சில அணிகள் திகழ்கின்றன. ஆனால் தற்போது கத்துக்குட்டி அணிகளும் பெரிய அணிகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் விளையாடி சில பிரமிக்கவைக்கும் வெற்றிகளை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல முன்னணி அணிகளுக்கு எதிராக பலமான போட்டியை கொடுக்கும் அணியாக ஆஃப்கானிஸ்தான் அணி உருவெடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆஃப்கானிஸ்தான் அணியானது டி20 கிரிக்கெட்டில் சற்று பலம் வாய்ந்த அணியாகவே திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவற்றை காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சிறப்பான வீரர்களை ஆஃப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது. அதோடு மட்டுமின்றி ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியும் சர்வதேச கிரிக்கெட்டில் மெல்லமெல்ல தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே அணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்போது பந்துவீச்சு துறையிலும் மேலும் அணியை சிறப்பாக மாற்றவேண்டும் என்கிற காரணத்தினால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல்லை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் குல் 2020 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் ஏகப்பட்ட அனுபவம் கொண்ட இவர் தற்போது அடுத்த அவதாரமாக சர்வதேச கிரிக்கெட் அணியான ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 4ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் இணையும் இவர் அடுத்த மூன்று வாரத்திற்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவார் என்றும் அவரது பணி திருப்திகரமாக இருந்தால் அவரது பதவி காலம் நீட்டிக்கப்படும் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பயிற்சியாளர் பதவி நியமனம் குறித்து பேசிய அவர், “உள்ளூர் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருந்து வந்த வேளையில் தற்போது சர்வதேச அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி தான். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் உறுதியான வகையில் எனது பயிற்சி அவர்களுக்கு இருக்கும் எனது அனுபவத்தை அப்படியே அடுத்த தலைமுறைக்கு நான் சிறப்பான அறிவுரைகளை வழங்க உள்ளேன்” என்று கூறினார்.