டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வியடைந்தாலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ஷர்துல் தாக்கூர் இணைக்கப்படுவார் என தெரிந்தது. ஆனால் கடைசி நேர ட்விஸ்டாக 2 மாற்றங்கள் நடந்தன. இஷாந்த் சர்மாவுடன் சேர்த்து முகமது ஷமியும் உட்காரவைக்கப்பட்டார். ஷமிக்கு மாற்றாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் கொண்டு வரப்பட்டார்.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி வந்த முகமது ஷமியை நீக்கிவிட்டு உமேஷ் யாதவை ஏன் கொண்டு வந்தீர்கள் என விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு தனது பந்துவீச்சில் தொடக்கத்திலேயே உமேஷ் யாதவ் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய 2ஆவது நாள் ஆட்டத்திலும் சிறிது நேரத்திலேயே டேவிட் மாலன் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இந்த விக்கெட்டுகள் மூலம் புதிய சாதனை ஒன்றையும் உமேஷ் யாதவ் படைத்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்களை எடுத்த 6ஆவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதுமட்டுமல்லாமல் அதிவேகமாக 150 விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். உமேஷ் யாதவ் 48 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 39 போட்டிகளில் 150 விக்கெட்களை எடுத்து கபில் தேவ் உள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் 40 போட்டிகளிலும், முகமது ஷமி 42 போட்டிகளிலும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.