மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை தகர்த்த உம்ரான்; ஸ்தம்பித்த வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
வங்கதேத்தின் தாக்கா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் 11 ரன்னிலும், மற்றும் லிட்டன் தாஸ் 7 ரன்களிலும் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இருவரையும் முகமது சிராஜ் வெளியேற்றி அசத்தினார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நஜிமுல் ஹூசைன் 21 ரன்கள் எடுத்திருந்த போது, உம்ரன் மாலிக்கின் அசுரவேக பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்து விக்கெட்டை இழந்தார். இதில் அவர் வீசிய பந்து 151 கி.மீ வேகமாகவும் பதிவாகியிருந்தது.
அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 8, முஸ்தபிசுர் ரஹீம் 12 மற்றும் ஆஃபிஃப் ஹூசைன் 0 ஆகியோரை வாஷிங்டன் சுந்தர் தனது துல்லியமான பந்துவீச்சால் வெளியேற்றினார். இதன் மூலம் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள வங்கதேச அணி தடுமாறி வருகிறது.
இதற்கிடையில் 151 கி.மீ வேகத்தில் ஸ்டம்புகளை பதம்பார்த்த உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு குறித்தான காணொளி தற்போது இணையத்துல் வைரலாகி வருகிறது.