ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களும், எய்டன் மார்க்கம் 56 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது மட்டுமின்றி இறுதி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற போது நான்கு சிக்ஸர்களை விளாசி கடைசி பந்தில் வெற்றியும் பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் இறுதி நேரத்தில் கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குஜராத் அணியின் வீரர்களான திவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் 3 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் குவித்து அசாத்தியமான வெற்றியை அந்த அணிக்கு பெற்று தந்தனர். என்னதான் இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றிருந்தாலும் சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஒருபுறம் குஜராத் அணியின் வீரர்களை வீழ்த்த முடியாமல் திணறி வந்த வேளையில் உம்ரான் மாலிக் தனது அசுர வேகத்தால் குஜராத் வீரர்களை திணறவைத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்த போட்டியில் விளையாடிய உம்ரான் மாலிக் ஐபிஎல் வரலாற்றில் இலங்கை ஜாம்பவான் லாசித் மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்துள்ளார்.
அதன்படி நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன்காரணமாக சன் ரைசர்ஸ் அணி தோற்று இருந்தாலும் ஆட்டநாயகன் விருதை ஜெயித்தார். இந்த போட்டியில் அவர் செய்த சாதனை யாதெனில், அவர் எடுத்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் மூலம் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 4 வீரர்களை போல்ட் செய்த பவுலர்களாக மலிங்கா மற்றும் சித்தார்த் திரிவேதி ஆகியோர் இருக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக மலிங்கா 4 வீரர்களை கிளீன் போல்ட் ஆக்கினார். அதேபோன்று சித்தார்த் திரிவேதி 2012-ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக 4 வீரர்களை கிளீன் போல்டாக்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது 10 ஆண்டுகள் கழித்து உம்ரான் மாலிக் குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நான்கு பேட்ஸ்மேன்களை கிளீன் போல்டாக்கி இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.