இதனை செய்தால் உம்ரான் தான் இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் - பிரையன் லாரா!

Updated: Thu, Aug 10 2023 22:01 IST
Image Source: Google

இந்தியா இதுவரை கண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமான பந்துவீச்சாளர் ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக் தான். இந்திய கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமான காலகட்டத்தில் உணர்ந்த பரவசத்தை, அதற்குப் பிறகு உம்ரான் மாலிக் அறிமுகத்தின் போது தான் நான் உணர்ந்தேன் என்று சுனில் கவாஸ்கர் சொல்லும் அளவுக்கு, அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தனது காஷ்மீர் அணியின் சக வீரர் அப்துல் சமாத் மூலம் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வந்து, தமிழகத்தின் நடராஜன் கொரோனா காலத்தில் காயமடைய, அந்த வாய்ப்பில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்து, தனது அதிவேகப்பந்து வீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணிக்கு நுழைந்தவர் உம்ரான் மாலிக்.

ஆனால் அவரிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் தென்படவில்லை. அவரிடம் சுயமான பந்துவீச்சு சிந்தனை குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக அவரது வேகத்தை பயன்படுத்தி பந்துவீச்சாளர்கள் வெகு எளிதாக பவுண்டரிகள் விளாசுகிறார்கள். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் அவர் வெறும் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். மேலும் அவருடைய எக்கானமி 10.80.

இந்தநிலையில் சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவடைந்துள்ள, கிரிக்கெட் உலகின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா உம்ரான் மாலிக் குறித்தான சில முக்கியமான விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய பிரையன் லாரா, “அவர் எப்பொழுதும் பரபரப்பாக இருப்பார். ஆனால் வெறும் வேகம் மட்டுமே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை எப்பொழுதும் தொந்தரவு செய்யாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பந்தை கொண்டு ஏதாவது செய்ய வேண்டும். நீங்கள் விவேகமாக இருக்க வேண்டும். நீங்கள் சில நேரங்களில் தாமதிக்க வேண்டும் சில நேரங்களில் வேகத்தைக் கொண்டு மோத வேண்டும். இதற்கான நேரங்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர் மிகவும் இளமையாக இருக்கிறார். அவர் வயதுக்கு மீறி முன்னேறியும் வந்திருக்கிறார். இதற்கு நம்மிடம் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. வாசிம் அக்ரமிடம் இயல்பான வேகம் இருந்தது. மால்கம் மார்ஷல் இடம் அழிக்கும் வேகம் இருந்தது. போலவே ஹோல்டிங்கும் இருந்தார். ஆனால் அவர்கள் எல்லாம் ஒருகட்டத்தில் தங்களை மாற்றிக் கொண்டுதான் வர வேண்டியதாக இருந்தது. உம்ரான் மாலிக் டேல் ஸ்டெய்ன் உடன் தொடர்ந்து பணியாற்றி வந்தால், அவர் இந்தியா தயாரிக்கும் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::