ஸ்லெட்ஜிங் செய்த அகர்வாலின் விலா எழும்பை பதம்பார்த்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடரின் 70ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் சம்பிரதாய ஆட்டத்தில் மோதினர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 15ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஹைதராபாத் அணியின் பேட்டிங்கின் போது, உம்ரான் மாலிக் பேட்டிங் செய்ய களத்துக்கு தாமதமாக வந்தார். அப்போது பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த கேப்டன் மாயங் அகர்வால் உம்ரான் மாலிக்கை வெறுப்பேற்றும் வகையில் ஏதோ பேசினார். ஆனால் உமரான் மாலிக் அதனை கண்டு கொள்ளவில்லை.
இதற்கு பதிலடி தரும் விதமாக மாயங்க் அகர்வால் பேட்டிங் செய்ய வந்த போது , உம்ரான் மாலிக் பந்துவீசினார். மாயங் அகர்வால் விலா எலும்பை பதம் பார்க்கும் வகையில் உம்ரான் மாலிக் பந்துவீசினார். பந்து பட்டதும், சில நொடிகள் வலியை தாங்க முடியாமல் மாயங் அகர்வால் துடித்தார். இருவருக்கும் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனிடையே, ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக பந்துவீசும் வீரர்களுக்கு தினசரி பரிசு வழங்கப்படுகிறது. இதில் உம்ரான் மாலிக் தொடர்ந்து 14 போட்டியிலும் அதிவேகமாக பந்துவீசியதற்கான விருதை வாங்கினார். இடையில் சில போட்டியில் ரன்களை வாரி வழங்கினாலும், மீண்டும் அபார்ம்க்கு திரும்பினார்.
நடப்பு சீசனில் அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்திய அணிக்காக விளையாடும் 2ஆவது காஷ்மீர் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். உம்ரான் மாலிக் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு தரப்படும் என நம்புவதாக ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.