உம்ரானின் சாதனையை முறியடிப்பேன் - இஷானுல்லா!
கடந்தாண்டு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாகக்த்தை ஏற்படுத்திய வீரர் உம்ரான் மாலிக் எனக்கூறலாம். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 150+ வேகத்தில் வீசி அசத்தினார். தனது அதிவேக பவுலிங்கால் ஒரே சீசனில் 18 விக்கெட்களை கைப்பற்றி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். இதனால் தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடிவிட்ட உம்ரான் மாலிக் குறுகிய காலத்திலேயே பெரும் சாதனையை படைத்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மணிக்கு 156கிமீ வேகத்தில் பந்துவீசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச வேகத்தில் பந்துவீசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்காக பாராட்டுக்கள் குவிந்து வந்தன.
இந்நிலையில் உம்ரான் மாலிக்கிற்கு சவால் கொடுக்க ஒருவர் வந்துள்ளார். பாகிஸ்தானில் பிஎஸ்எல் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் இஷனுல்லா என்ற 20 வயது இளம் வீரர். இவர் 150+ என்ற வேகத்தை அசால்ட்டாக வீசி வருகிறார். மேலும் 5 /20 என்ற சிறந்த பவுலிங் ரெக்கார்டை வைத்திருக்கிறார். இதனால் பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான தொடரில் இஷனுல்லாவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து அவர் பேசியுள்ளார். அதில், “அதிவேகமாக பந்துவீசி சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை தான். கடவுளிடம் அதற்கு வேண்டி வருகிறேன். உம்ரான் மாலிக் ஏற்கனவே 157 கிமீ வேகத்தில் வீசியிருக்கிறார். அவரின் சாதனையை முதலில் முறியடிக்க முயல்வேன். அதன்பின்னர் 160கிமீ வேகத்தில் வீச தயாராவேன்” என இஷானுல்லா கூறியுள்ளார்.
இஷானுல்லா நிச்சயம் சாதிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பிஎஸ்எல் தொடரி ல் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இத்தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் அவர் தான். வரவுள்ள ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைகளில் உம்ரான் - இஷானுல்லா ஆகியோருக்கு இடையே பெரும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.