ஐபிஎல் 2023: சாதனை நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. இதில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன்(53) மற்றும் விஜய் சங்கர்(63) இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எனும் சற்று கடினமான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா(45)மற்றும் வெங்கடேஷ் ஐயர்(83) இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். 16 ஓவரில் 155 ரன்கள் அடித்திருந்த கொல்கத்தா அணிக்கு, கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் வெற்றிபெற தேவைப்பட்டது. ரஷித் கான் உள்ளே வந்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஆட்டத்தை குஜராத் அணியின் பக்கம் திருப்பினார்.
கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் விளாசி, போட்டியின் கடைசி பந்தில் கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கிய ரிங்கு சிங் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஷா ருக் கான் உள்ளிட்ட பலரும் பாராட்டி வரும் நிலையில், ரோகித் சர்மாவின் ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கே ஐபிஎல் குறித்து பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஐபிஎல் காரணமாகவே இந்திய அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ஐபிஎல் என்பதே பணம் சம்பாரிக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கேட்டுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. ஐபிஎல் வந்தபின் டி20 உலக கோப்பையையும் வெல்லவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வருகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோஹித் சர்மாவின் ட்வீட் உள்ளது. அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஐபிஎல் என்பது திறமை இருக்கும் வீரருக்கு சரியான வாய்ப்புகளை கொடுத்து திறமையான வீரர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் தொடராகும். அபாரமாக விளையாடிய ரிங்கு சிங்-க்கு எனது வாழ்த்துக்கள். இன்றைய நாள் உன்னுடையது அல்ல யாஷ் தயாள். இதிலிருந்து கற்றுக்கொள்” என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.