பிபிஎல் தொடரில் விளையாடிய மூதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்ற உன்முக்த் சந்த்!

Updated: Tue, Jan 18 2022 15:38 IST
Image Source: Google

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த், இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்து அசத்தினார். இதனால் அவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதனால் இந்திய ஏ அணிகளில் இடம்பெற்ற உன்முக்த் சந்த், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். சரியாக விளையாடாததால் 2017இல் டெல்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு உத்தரகண்ட் அணியில் இணைந்து விளையாடினார். எனினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுத்து கவனம் ஈர்க்க முடியவில்லை. 

18 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். தில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளில் இடம்பெற்றார். முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் எடுத்த உன்முக்த் சந்த், 28 வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். பிசிசிஐக்கு விடை கொடுத்து உலகம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறேன் என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

அடுத்த மூன்று வருடங்களில் அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக உன்முக்த் சந்த் கூறினார். அமெரிக்காவில் மைனர் லீக் போட்டியில் விளையாடியுள்ள உன்முக்த் சந்த், 2023இல் தொடங்கும் மேஜர் லீக் போட்டியிலும் விளையாடத் திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்குத் தேர்வான உன்முக்த் சந்த், இன்று நடைபெற்று வரும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகியுள்ளார். 

இதையடுத்து பிபிஎல் போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆடவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக மகளிர் பிபிஎல் போட்டியில் பல இந்திய வீராங்கனைகள் இடம்பெற்று தங்கள் திறமையை நிருபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை