திடீரென இன்ஸ்டா நேரலையில் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த தோனி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் 300+ ரன்களை குவித்தன. குறிப்பாக இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவர்வரை சென்றது.
முதல் போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிபெற அணி வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 11 ரன்களை மட்டும் முகமது சிராஜ் விட்டுக்கொடுத்ததால், இந்தியா மூன்று ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்தியா 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது கைல் மேய்ர்ஸ் பந்துவீச்சில் அக்ஸர் பேடல் ஒரு சிக்ஸர் அடித்ததால் கடைசி இரண்டு பந்துகள் மிச்சம் இருக்கும் நிலையில் இந்தியா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இரவு 7:00 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணியை இந்தியா முதல்முறையாக ஒயிட் வாஸ் செய்த பெருமையை பெறும்.
இதனைத் தொடர்ந்து இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையில், சீனியர் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக அவர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், அந்த சமயத்தில் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராம் லைங் போட்டு, இந்திய வீரர்களை இணைக்க ஆரம்பித்தார். முதலில் ரோஹித் ஷர்மா அடுத்து சூர்யகுமார் யாதவ் என ஒருவர்பின் ஒருவராக இந்த நேரலையில் இணைந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அடுத்து யாரை சேர்க்கலாம் என ரசிகர்களிடம் ரிஷப் பந்த் கேட்க, அவர்கள் தோனியின் பெயரை பரிந்துரை செய்தார்கள். ரிஷப் பந்தும் தோனியை இணைத்தார். அப்போது முதலில் போனை எடுத்த சாக்ஷி தோனி, ரசிகர்களுக்கு வணக்கம் எனத் தெரிவித்துவிட்டு தோனியின் முகத்தை காண்பிக்க ஆரம்பித்தார்.
அப்போது, சாக்ஷியிடம் ரிஷப் பந்த், ‘தோனியை எப்படியாவது பேச வையுங்கள்’ எனக் கூறினார். தோனியும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். தோனி சமூக வலைத்தளங்களை அவ்வபோது மட்டுமே பயன்படுத்த கூடியவர். திடீரென்று அவரது முகம் தோன்றியதால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.