AUS vs SA, 3rd Test: இரட்டை சதத்தை நோக்கி உஸ்மான் கவாஜா; வலிமையான நிலையில் ஆஸி!
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது. வார்னர் 10 ரன்களுக்கும், லபுஜானே 79 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். மழையின் குறுக்கீட்டால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே தடைப்பட்டது. 147 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கவாஜா, ஸ்மித் இருவரும் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள் கவாஜா மற்றும் ஸ்மித் இருவரும் தென் ஆப்பிரிக்கா பவுலர்களுக்கு பெருத்த சிக்கலை ஏற்படுத்தினர். இதில் ஸ்மித தனது 30ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்தபின் ஸ்மித், 104 ரன்கள் இருந்தபோது, மகாராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களைக்கடந்தார். பின்னர் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 195 ரன்களுடனும், மேட் ரென்ஷா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.