அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி - காணொளி!

Updated: Tue, Apr 16 2024 23:19 IST
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி - காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதில் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கியகேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 56 பந்துகளை சந்தித்த நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்த நிலையில் யஷஸ்வி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் ரியான் பராக் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் பராக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய துருவ் ஜுரெலும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் விக்கெட் இழப்பை தடுக்கும் பொறுப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். ஆனால் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அஸ்வின், வருன் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

 

பின்னர் கடந்த போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷிம்ரான் ஹெட்மையர் யாரும் எதிர்பாராத வகையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ராஜஸ்தான் அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது வைரலாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை