போட்டியின் நடுவே காயமடைந்த வெங்கடேஷ் ஐயர்; மைதானத்தில் பரபரப்பு!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மேற்கு மண்டல அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா, ஜெய்ஷவால் ஜோடி களமிறங்கினர்.
இதில், ஜெய்ஷ்வால் டக் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராகுல் திரிபாதி பொறுமையாக விளையாடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவருக்கு அர்மான் ஜாபர் 23 ரன்கள் எடுத்து கம்பெனி கொடுத்தார்.
இறுதியில் சம்ஸ் முலானி 41 ரன்களும், டாஸ் கோடியன் 36 ரன்களும் எடுக்க, மேற்கு பிராந்திய அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மத்திய மிண்டல அணியின் பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் வீரர் குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 2ஆவது நாள் ஆட்டத்தில், மத்திய மண்டல அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் உனாட்கட் உள்ளிட்ட வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், மத்திய மண்டல வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அப்போது, தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் 6 ரன்கள் எடுத்திருந்த போது, காஜா என்ற வீரர் பந்தை ஃபில்டிங் செய்யும் போது எறிந்தார். அது, வெங்கடேஷ் ஐயரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் அவர் சுருண்டு விழுந்தார். இதனையடுத்து மைதானத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
இதனால், அங்கு இருந்த ரசிகர்கள் பதறி போய்னர். எனினும் வெங்கடேஷ் ஐயர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக வெங்கடேஷ் ஐயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார்.