கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்; வைரல் காணொளி!
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் வெங்கடேஷ் ஐயர். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தமாக ஒரு சதம் மற்றும் 2 அரைசதம் உள்பட 404 ரன்கள் குவித்துள்ளார்.
இதுவரையில் 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 956 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் சதம் அடித்ததன் மூலமாக பிரெண்டன் மெக்கல்லத்திற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் சதமடித்த முதல் கேகேஆர் வீரராக வெங்கடேஷ் ஐயர் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் அதிகபட்சமாக 104 ரன்களை எடுத்துள்ளார்.
ஆனால், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த கேகேஆர் 7ஆவது இடம் பிடித்து ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து வெளியேறியது. 16ஆவது ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது விடுமுறையை கழித்து வரும் வெங்கடேஷ் ஐயர், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் வளாகத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "விளையாட்டின் மீதான காதல் நம்பமுடியாதது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து இளம் வேதா பாடசாலை மாணவர்களுடன் ஒரு சிறந்த நேரம் இருந்தது" என்று பதிவிட்டுள்ளார். தற்போது அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.