இந்திய அணியை கடுமையாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!

Updated: Mon, Aug 14 2023 16:06 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று சம்பந்தமே இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, பேட்டிங்கிலும் சரியாக செயல்படாமல் சொதப்பி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் அடித்தார். அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு அந்த அணியின் அதிரடி நாயகனான நிக்கோலஸ் பூரன் 47 ரன்களையும், தொடக்க வீரர் பிராண்டன் கிங் 85 ரன்களையும் எடுத்தனர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18ஆவது ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரை விண்டீஸ் அணி 3- 2 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி பறிகொடுத்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.  அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் இந்திய அணியையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவும், ராகுல் டிராவிட்டும் தான் முக்கிய காரணம். பல வருடங்களுக்கு தோனி பயன்படுத்திய யுக்தி என்ற ஒரு வார்த்தையை இந்திய அணி சமீபகாலமாக தவறாக பயன்படுத்தி வருகிறது. தோனி தான் சொன்னதை செய்தும் காட்டினார், ஆனால் தற்போது அந்த வார்த்தையை வைத்து அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தி வருகின்றனர். அணி தேர்வில் ஒரு தெளிவே இல்லை. சம்பந்தமே இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய அணியையும் பலவீனப்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை