பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அகர்வால் 60 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.
இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் டீன் எல்கர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பீட்டர்சன், ஐடன் மார்க்ரமுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களைச் சேர்த்துள்ளது.
மார்க்ரம் 9 ரன்களுடனும், பீட்டர்சன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.