ஆஸ்திரேலிட டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெயின் ராஜினாமா!
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிம் பெயின் தன்னுடன் பணியாற்றும் டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பின் சக பெண் ஊழியருக்கு மோசமான பாலியல் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை அனுப்பியது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டிம் பெயின் அறிவித்துள்ளார்.
டிம் பெயின் அனுப்பிய குறுஞ்செய்திகள், படங்கள் குறித்து அந்தப் பெண் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பில் 2017ஆம் ஆண்டு புகார் செய்தார். அப்போது டிம் பெயினிடம் இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டதில் எந்த விதிமுறை மீறலும், ஒழுக்கக் கேட்டையும் செய்யவில்லை என முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், டிம் பெயின் அனுப்பிய குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற தரமற்ற செயல்களைச் செய்தவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனின் தகுதிக்கு உகந்தது அல்ல என்பதால் டிம் பெயின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் டிம் பெயின் திடீர் ராஜினாமா ஆஸ்திரேலிய அணியின் தார்மீக நம்பிக்கையை பெரிதும் குலைக்கும். கேப்டன் பதவியிலிருந்துதான் ராஜினாமா செய்துள்ளதாகவும், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வில் இருப்பதாகவும் பெயிம்தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பேசிய டிம் பெயின், “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தால் இன்று எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். 2017ஆம் ஆண்டு சக பெண் ஊழியர் ஒருவருக்கு தவறான குறுஞ்செய்திகளையும், படங்களையும் அனுப்பினேன்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கமைப்பு நடத்திய விசாரணையில் நான் முழமையாகப் பங்கேற்றேன், ஒத்துழைத்தேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு, டாஸ்மானிய கிரிக்கெட்டின் மனிதவள அமைப்பு நடத்திய விசாரணையில் ஒழுக்கவிதிகளை மீறி நான் நடக்கவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், அன்று நடந்த சம்பவத்துக்கு இன்றுகூட நான் வருத்தப்படுகிறேன். என்னுடைய மனைவி, குழந்தைகள், குடும்பத்தாரிடம் அப்போது பேசினேன். என்னை அவர்கள் மன்னித்து இன்றுவரை அதற்காக எனக்கு ஆதரவு தருகிறார்கள்.
இருப்பினும் நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருப்பதாக அறிந்தேன்.2017ம் ஆண்டு நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் படங்கள், ஆஸ்திரேலிய கேப்டனாக இருப்பதற்கு தகுதியற்ற ஒன்றாகும்.
அந்த செயல்கள் எனக்கு ஆழ்ந்த வேதனையை தருகிறது, என் குடும்பத்தார், மனைவி, அனைவரையும் வேதனைப்படுத்தும். என்னுடைய செயல், கிரிக்கெட் விளையாட்டின் மதிப்புக்கும் களங்கம் விளைவித்ததமைக்கு மன்னிப்புக் கோருகிறேன்.
ஆதலால், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகுவதுதான் சரியான் முடிவாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஆதலால் உடனடியாக அந்தப் பதவியிலிருந்தும் விலகுகிறேன். மிகப்பெரிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் வர இருக்கும் நிலையில், விரும்பத்தகாத தொந்தரவுகள் வருவதை நான் விரும்பவில்லை.
ஆஸ்திரேலிய கேப்டனாக இருக்கும்போது அந்தப் பணியை விரும்பிச் செய்தேன், என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திச் சென்றதை பெருமையாகக் கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த எனது சக வீரர்கள், அவர்களால் நாங்கள் சாதித்ததையும் பெருமையாகக் கருதுகிறேன்.
என்னைப் புரி்ந்துகொண்டமைக்கும், என்னை மன்னிக்கவும் நான் கோருகிறேன்.
ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் என்னுடைய கடந்தகால செயலுக்காக ஆழ்ந்த வருத்தங்களை இந்த ஆஷஸ் தொடர் நேரத்தில் தெரிவிக்கிறேன், ரசிகர்களுக்கும்,கிரிக்கெட் சமூகத்துக்கும் நான் மிகுந்த வேதனையை ஏற்படுத்திவிட்டேன். அதற்கு மன்னிப்புக் கோருகிறேன்” என்று தெரிவித்தார்
Also Read: T20 World Cup 2021
டிம் பெயின் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தநிலையில் அடுத்ததாக, வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த 7 ஆண்டுகளாக துணைக் கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ் கேப்டன் பதவியில் அமர்த்தப்படலாம். 65 ஆண்டுகால ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாகநியமிக்கப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.