ரஞ்சி கோப்பை: மீண்டும் காயத்துடன் களமிறங்கிய விஹாரி; இலக்கை விரட்டும் ம.பி!
ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேசம் – ஆந்திரா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிக்கி புயி 149, கரண் ஷிண்டே 110 ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்தின் தொடக்க நாளில் ஹனுமா விஹாரி பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. இதனால் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஹனுமா விகாரி மீண்டும் பேட் செய்ய வந்தார். வலது கை பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்ஸ்மேனாக மாறினார். கிட்டத்தட்ட ஒரு கையால் மட்டையை பிடித்தபடி விளையாடி இரு பவுண்டரிகளை அடித்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ஹனுமா விஹாரி இறுதியாக சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு அவர், 26 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஷுபம் சர்மா 51 ரன்களைச் சேர்த்தார். ஆந்திரா அணி தரப்பில் பிரித்வி ராஜ் 5 விக்கெட்டுகளையும், சசிகாந்த் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதைத்தொடர்ந்து 125 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆந்திர அணி வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுதது. இதில் அதிகபட்சமாக அஸ்வின் ஹெபர் 35 ரன்களை எடுத்திருந்தார். மத்திய பிரதேச அணி தரப்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த இன்னிங்ஸிலும் களமிறங்கிய ஆந்திர அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி தனது காயத்தை பொறுட்படுத்தாமல் கடைசி விக்கெட்டாக களமிறங்கி 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் அந்திரா அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மத்திய பிரதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யாஷ் தூபே 24 ரன்களுடனும், ஹிமான்ஷூ மந்த்ரி 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தையும் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.