விஜய் ஹசாரே கோப்பை: சொதப்பல் பேட்டிங்; அரையிறுதி வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!

Updated: Mon, Nov 28 2022 18:56 IST
Image Source: Google

இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் தமிழ்நாடு அணி காலிறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணியின் சீனியர் வீரர் ஷெல்டான் ஜாக்சன் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 62 ரன்களுக்கு ஹர்விக் ஆட்டமிழந்தார். ஜெய் ஜோஹில் 34 ரன்களையும் மற்றும் சமர்த் வியாஸ்  27 ரன்களையும் ஆகிய இருவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். 

அதன்பின்னர் ஆர்பிள் வசவடா 51 ரன்களையும் மற்றும் சிராக் ஜானி 52 ரன்களையும் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, 50 ஓவரில் சௌராஷ்டிரா அணி 293 ரன்களை குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 294 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் 8 ரன்களிலும், சாய் சுதர்சன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். 

இந்த தொடரின் தொடக்கத்திலிருந்து அபாரமாக ஆடி ஒரு இரட்டை சதம் உட்பட தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி வரலாற்று சாதனை படைத்த நாராயண் ஜெகதீசனும், அவருடன் இணைந்து இந்த தொடர் முழுக்க சதங்களை விளாசி அசத்திய சாய் சுதர்சனும் முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் சொதப்பினர்.

அதன்பின் களமிறங்கிய பாபா அபரஜித்தும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாபா இந்திரஜித் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவரும் பொறுப்புடன் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தனர். ஆனால் பாபா இந்திரஜித் 53 ரன்களுக்கும், சாய் கிஷோர் 74 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் 48 ஓவரில் தமிழ்நாடு அணி 249 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சௌராஷ்டிரா அணி தரப்பில் சிராக் ஜானி 4 விக்கெட்டுகளையும், பார்த் பட், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.

 இதன்மூலம் தமிழ்நாடு அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து அரையிறுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை