விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி, 3ஆவது போட்டியில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில் அலூரில் நடைபெற்ற தனது 4-வது ஆட்டத்தில் கோவா அணியை எதிர்கொண்டது தமிழ்நாடு. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் நாரயணன் ஜெகதீசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டனர்.
இதனால் ஆட்டத்தின் 41ஆவது ஓவரில் தான் இந்தக் கூட்டணியை கோவாவால் பிரிக்க முடிந்தது. இதில் சாய் சுதர்சன் 117 ரன்களுக்கும் ஜெகதீசன் 140 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 168 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
அதன்பின் களமிறங்கிய ஷாருக் கான் 29 ரன்களும், பாபா அபரஜித் 31 ரன்களும் எடுத்தார்கள். இந்த வருடப் போட்டியில் தொடர்ச்சியாக 3 சதங்களை ஜெகதீசனும், தொடர்ச்சியாக 2 சதங்களை சாய் சுதர்சனும் எடுத்துள்ளார்கள்.
இதன்மூலம் தமிழக அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது. கோவா அணி தரப்பில் அர்ஜுன் டெண்டுல்கர், பிரபுதேசாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய கோவா அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கட்கெர், குதன்கர் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்து அரைசதம் கடந்தனர். பின் கட்கெர் 51 ரன்களிலும், குதன்கர் 67 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கெர்கர் 50 ரன்களிலும், பிரபுதேசாய் 11 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் வந்த சித்தேச லத் 62 ரன்களுடன் ஒருமுனையில் விக்கெட் இழக்காமல் இருந்தாலும் மறுமுனையில் தீப்ராஜ் 42, மோஹித் 16 ரன்கள் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் கோவா அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் தமிழ்நாடு அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.