விஜய் ஹசாரே கோப்பை 2023: சதமடித்து மிரட்டிய தீபக் ஹூடா; இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் சமர்த் 8 ரன்களுக்கும், கேப்டன் மயங்க் அகர்வால் 13 ரன்களுக்கும், நிகின் ஜோஸ் 21 ரன்களிலும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 37 ரன்களிலும், மனீஷ் பாண்டே 28 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர் - மனோஜ் பந்தகே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபினவ் மனோகர் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 91 ரன்னுக்கும், மனோஜ் பந்தகே 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 63 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் கர்நாடகா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு மோசமான தொடக்கமே கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஜீத் தோமர், ராம் மோகன் இருவரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய மஹிபால் லாம்ரோரும் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் தீபக் ஹூடா- கரண் லம்பா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூட சதமடித்து அணியின் வெற்றிக்கான பாதையை உருவாக்கினார். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 19 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 180 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த கரண் லம்பா 7 பவுண்டரிகளுடன் 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 43.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி நடப்பு விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.