விஜய் ஹசாரே கோப்பை 2023: சஞ்சு சாம்சன் போராட்டம் வீண்; கேரளாவை வீழ்த்தியது ரயில்வேஸ்!
இந்தியாவில் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே கோப்பை நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளா கேரளா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ர கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ரயில்வேஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிவம் சௌத்ரி 3 ரன்களுக்கும், விவேக் சிங் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பிரதாம் சிங் - சஹப் யுவராஜ் இணை சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 61 ரன்களை எடுத்திருந்த பிரதாம் சிங் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஹப் யுவராஜ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 121 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ரயில்வேஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேரள அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. டாப் ஆர்டர் வீரர்கள் ரோஹன் ரன்கள் ஏதுமின்றியும், சச்சின் பேபி 2 ரன்களுக்கும், சல்மன் நிஸர் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, தொடக்க வீரர் கிருஷ்ன பிரசாத் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் கோபால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஸ்ரேயாஸ் கோபால் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 128 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க கேரள அணியின் தோல்வியும் உறுதியானது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற கேரள அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை மட்டுமே எடுத்தது.
ரயில்வேஸ் அணி தரப்பில் ராகுல் ஷர்மா 4 விக்கெட்டுகளையும், ஹிமான்ஷு சங்வான் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் ரயில்வேஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கேரள அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் கேரள அணி தோல்வியை தழுவினாலும் சஞ்சு சாம்சனின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் 5ஆவது வீரராக களமிறஃங்கி சதம் விளாசியது பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.