நியூசிலாந்து பயிற்சியாளர்கள் குழுவில் ஹெர்த், விக்ரம் ரத்தோர்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடரில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கனா ஹெர்தையும், அணியின் பேட்டிங் பயிர்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரையும் நியமிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த அணி தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரமை நியமித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருடன் ரங்கனா ஹெர்த் மற்றும் விக்ரம் ரத்தோரும் நியூசிலாந்தின் பயிர்சியாளர் குழுவில் இணையவுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.