அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விராட் கோலி!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களும், கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன்பின் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃப்கர் ஸமான் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார். நீண்ட நேரம் தாக்குபிடித்து வழக்கம் போல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் வந்த குஷ்தில் ஷா 11 பந்தில் 14 ரன்களும், 8 பந்தில் 16 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் பரபரப்பான போட்டியில் 19.5 ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான வீரர்களில் ஒருவரான அதிரடி ஆட்டக்காரர் ஆசிஃப் அலி, போட்டியின் 18ஆவது ஓவரில் ஒரு இலகுவான கேட்ச் கொடுத்தார், ஆனால் இதனை அர்ஸ்தீப் சிங் தவறவிட்டார். இது போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய அணியின் இந்த தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தான் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முகமது ஷமியை அவரது மதத்தை வைத்து விமர்சித்த அதே கூட்டம் இந்த முறை அர்ஷ்தீப் சிங்கையும் பிடித்து கொண்டது, அர்ஸ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில் அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் என மாற்றும் அளவிற்கு சில ரசிகர்கள் கீழ்தரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை விட்டது குறித்து பேசிய கோலி, “இக்கட்டான சூழ்நிலைகளில் இது போன்று தவறுகள் நடப்பது இயல்பானது தான். நான் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான எனது முதல் போட்டியில் தேவையே இல்லாத மோசமான ஷாட் அடித்து விக்கெட்டை இழந்திருக்கிறேன்.
நெருக்கடியின் போது தவறு நடப்பது இயல்பானது தான். சீனியர் வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் சில விசயங்களை கற்று கொள்ள வேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும். அணி நிர்வாகம் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
விராட் கோலியை போன்று, முன்னாள் இந்நாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலம் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.