6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று புனே மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .
இன்றைய போட்டிக்கான வங்கதேசம் அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் வேக் பந்துவீச்சாளர் டஸ்கின் அகமத் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக நசும் அகமத் மற்றும் முகமது ஹசன் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக வந்த லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் இருவரும் பும்ரா மற்றும் சிராஜ் பந்துவீச்சுக்கு மிகவும் கவனத்தைக் கொடுத்து பொறுமையாக விளையாடி 8 ஓவர்களை கடந்தார்கள். அப்போது ஒன்பதாவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். லிட்டன் தாஸ் நேராக அடித்த பந்து ஒன்றை காலால் தடுக்க முயன்று கீழே விழுந்த அவருக்கு முட்டியில் அடிபட்டது.
இதற்கு அடுத்து மருத்துவக் குழு உள்ளே வந்து அவருக்கு சிகிச்சை செய்தது. ஆனாலும் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாமல் வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மூன்று பந்துகள் வீசி இருந்த நிலையில் மீதி 3 பந்துகளை வீச கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியை அழைத்தார். விராட் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு பந்துவீச்சுக்கு வந்தார். அவர் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
தற்பொழுது ஹர்திக் பாண்டியா காலில் முட்டியில் காயம் அடைந்து இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது. இந்த காயம் விரும்பத்தகாத வகையில் இருக்கும் என்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் குறைவு ஏற்படும். உலகக் கோப்பையை வெல்வதில் பெரிய சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்நிலையில் விராட் கோலி பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.