சூர்யகுமாருக்கு தலைவணங்கிய கிங் கோலி!

Updated: Thu, Sep 01 2022 10:56 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 13 பந்தில் 21 ரன்கள் அடித்தார். 36 ரன்கள் அடித்த ராகுல் 13வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 96 ரன்கள் ஆகும். விராட் கோலி ஒருமுனையில் நிலைத்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்து அரைசதம் அடித்தார். ஆனால் 4ஆம் வரிசையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து மிரட்டிவிட்டார்.

சமகாலத்தின் தலைசிறந்த பவுலர்களையே தெறிக்கவிடுபவர் இந்தியாவின் 360 சூர்யகுமார். ஹாங்காங் பவுலர்களை சும்மா விடுவாரா..? ஹாங்காங் பவுலர்களின் பவுலிங்கை அடி வெளுத்துவாங்கிவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதத்தை எட்டிய சூர்யகுமார் யாதவ், 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 261.54 ஆகும். 

17 ஓவரில் இந்திய அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் தான் சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 18ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். 19ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி செம கெத்தாக முடித்தார்.

 

சூர்யகுமார் யாதவின் அபாரமான பேட்டிங்கை  மறுமுனையில் நின்று பார்த்து ரசித்து, வியந்த விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின், சூர்யகுமார் யாதவுக்கு தலைவணங்கினார். மிகப்பெரிய ஜாம்பவானான விராட் கோலியையே தலைவணங்க வைத்தது சூர்யகுமார் யாதவின் பேட்டிங். கோலி தலைவணங்கிய காணொளி வைரலாகிவருகிறது.

193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஹாங்காங் அணியை வெறும் 152 ரன்களுக்கு சுருட்டி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை