ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த விராட் கோலி!

Updated: Mon, Sep 11 2023 20:07 IST
Image Source: Google

இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது. இந்த போட்டியில் முதல் நாளில் 24.1 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய தொடர்ந்து ஆட்டத்தில் மேலும் ஒரு விக்கெட் கூட கொடுக்காமல் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இன்று தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. விராட் கோலி 122, கே எல்.ராகுல் 111 ரன்கள் எடுத்தார்கள். இதன் மூலம் கேஎல் ராகுல் தன்னுடைய உடல் தகுதியை போட்டியின் மூலமாகவே நிரூபித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பை நெருங்கி வரும்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எப்படியான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள இந்த போட்டி உதவியிருக்கிறது.

இந்த போட்டியில் கேஎல்.ராகுல் 100 பந்துகளில் சதத்தை எட்ட, விராட் கோலி 84 பந்துகளில் எட்டினார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 47ஆவது சதமாகும். இதன்மூலம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 47ஆவது சதம் அடித்த வீரர் என்ற ஒரு சாதனையை படைத்தார். 

அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தவர் என்ற வரிசையில், 112 முறை 50 ரன்கள் எடுத்து பாண்டிங் உடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். இரண்டாவது இடத்தில் சங்கக்கரா 118 முறை, சச்சின் டெண்டுல்கர் 145 முறை இருக்கிறார்கள்.

இதற்கடுத்து ஒரு ஆண்டில் ஆயிரம் ரண்களுக்கு மேல் அதிக முறை குவித்தவர்கள் என்ற சாதனையில் ராகுல் டிராவிடை முந்தி 12ஆவது ஆண்டாக ஆயிரம் ரன்களை விராட் கோலி பூர்த்தி செய்து இருக்கிறார். சச்சின் 16 ஆண்டுகள், சங்ககாரா 15 ஆண்டுகள், காலிஸ் மற்றும் ஜெயவர்த்தனே 14 ஆண்டுகள், ரிக்கி பாண்டிங் 13 ஆண்டுகள் என இப்பட்டியளில் விராட் கோலிக்கு முன்னதாக இணைந்துள்ளனர். 

அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000, 9000, 10000, 11000,12000 மற்றும் 13000 ரன்களைக் கடந்த வீரர் எனும் தனித்துவமான சாதனையையும் விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார். 

மேலும் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் விராட் கோலிக்கு இது தொடர்ச்சியாக நான்காவது சதமாகும். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 128, 131, 102 என தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார். இப்படியாக விராட் கோலி இந்த ஆட்டத்தில் ரன் குவித்ததின் மூலம் பல சாதனைகள் தகர்ந்து கொண்டு இருக்கிறது!

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை