கண்ணீருடன் வெளியேறிய விராட் கோலி; ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய காணொளி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. எளிய இலக்கு என்பதால் ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே அட்டாக்கிங் பாணியில் விளையாடியது.
இதில்47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும், ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் விளாசிய அபார சதம் அந்த அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. 43 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி, 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பையை இந்திய அணி பறிகொடுத்துள்ளது.
வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கலங்கி போயினர். ஒரு பக்கம் சிராஜ் கண்ணீர் விட்டு அழுத நிலையில், அவருக்கு பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆறுதல் கூறி ஓய்வறைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் ரோஹித் சர்மா சோகத்துடன் வெற்றிபெற்ற அணிக்கு வாழ்த்து கூறிவிட்டு, கண்ணீருடன் ஓய்வறை நோக்கி ஓடினார்.
அதேபோல் இந்திய அணியின் விராட் கோலியும் மைதானத்தில் கண் கலங்கினார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கேப்டனாக பறிகொடுத்த விராட் கோலி இம்முறை சக வீரராக பறி கொடுத்துள்ளார். மைதானத்திலேயே விராட் கோலி கண்ணீர்விட்ட நிலையில், யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தொப்பியை வைத்து முகத்தை மறைத்து கொண்டு ஓய்வறை திரும்பினார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.