முன்னாள் வீராங்கனைக்கு உதவிய கோலி; சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!
கரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இந்திய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடமில்லாமல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் தங்காள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடு வின் தாயார் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அவரது சிகிச்சைக்கு ஏற்கெனவே 16 லட்சம் ரூபாய் செலவான நிலையில், மேல் சிகிச்சைக்கு ரூ. 6 லட்சத்து 77 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த தொகையை தயார் செய்ய முடியாத ஸ்ரவந்தி நாயுடு நிதி உதவி கேட்டு பிசிசிஐ இடமும், ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். ஆனால் அது குறித்து அவர்கள் எந்தவித பதிலும் அவருக்கு அளிக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை டேக் செய்துள்ளார். இதனைக் கண்ட கோலி உடனே ஸ்ரவந்தி நாயுடு வின் தாயார் மருத்துவ செலவிற்காக 6.77 லட்சத்தை கொடுத்து உதவியுள்ளார்.
கோலி செய்த இந்த உதவி தற்போது அவரது ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஏற்கனவே விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து 7 நாட்களில் 11 கோடியை நன்கொடையாக அளித்து மட்டுமின்றி இதேபோன்று அடுத்தடுத்து தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.