டி20 உலகக்கோப்பை: சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தை கூறிய விராட் கோலி!

Updated: Sat, Oct 16 2021 22:07 IST
Image Source: Google

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் 2017ஆம் ஆண்டிலிருந்து முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தவர் யுஸ்வேந்திர சாஹல். விராட் கோலி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனானதும், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 

அதனால் குல்தீப்பும் சாஹலும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்து விளையாடி வந்தனர். ஆனால் 2019 உலக கோப்பையில் அவர்களது பந்துவீச்சு பெரியளவில் எடுபடாததையடுத்து, அதன்பின்னர் இருவரும் ஒருசேர இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்கள் ஐபிஎல்லில் தொடர்ந்து அசத்தலாக பந்துவீசியதுடன், இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளையும் அருமையாக பயன்படுத்தி கொண்டனர். அதேவேளையில், சாஹலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

ஆனாலும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய 5 ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டபோதிலும், கோலியின் பிரதான பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் அணியில் எடுக்கப்படவில்லை. அஷ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

சாஹல் எடுக்கப்படாததை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துவந்த நிலையில், டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

சாஹல் புறக்கணிப்பு குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி, “இந்த தேர்வு மிகவும் சவாலானது. ராகுல் சாஹர் கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்லில் அருமையாக பந்துவீசிவருவதால், அவரை  எடுக்க நினைத்தோம். நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார் ராகுல் சாஹர். இலங்கையிலும், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் முக்கியமான ஓவர்களை அருமையாக வீசினார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

டி20 உலக கோப்பை தொடரில் ஆடுகளங்கள் போகப்போக ஸ்லோவாகும். எனவே பந்தை காற்றில் வீசக்கூடிய ஸ்பின்னர்களை விட, நல்ல வேகத்தில் வீசக்கூடிய ஸ்பின்னர்களின் பவுலிங் அமீரகத்தில் எடுபடும். வேகமாக வீசக்கூடிய ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்னை கொடுப்பார்கள். எனவே தான், சாஹலுக்கு பதிலாக சாஹர் எடுக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை