என்னைப் பொறுத்தவரை இவர் தான் நம்பர் 1 - ஷேன் வாட்சன்
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் அறியப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் இணைந்துள்ளார்.
கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வரும் கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி சிறந்த பேட்ஸ்மேன்களாக வலம்வருகின்றனர். இவர்களில் ரூட்டை தவிர மற்ற மூவருமே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளீலும் அபாரமாக ஆடிவருகின்றனர்.
இந்த பட்டியலில் இப்போது பாபர் அசாமும் இணைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவரும் பாபர் அசாம் 3 விதமான போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடி ரன்களை குவித்து பல பேட்டிங் சாதனைகளை தகர்த்துவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள விராட்கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோலி பழையபடி ஆடமுடியாமல் திணறிவருகிறார்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக கோலி சதமே அடிக்கவில்லை என்றாலும் கூட அவர் தான், சமகால கிரிக்கெட்டர்களில் தன்னை பொறுத்தமட்டில் நம்பர் 1 என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தின் டாப் 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்து பேசிய ஷேன் வாட்சன், “டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னை பொறுத்தவரை விராட் கோலி தான் நம்பர் 1. ஒவ்வொரு போட்டியில் களமிறங்கும்போதும் அவரது நோக்கமும் வேட்கையும் கடுமையாக இருக்கும். அவரால் களத்தில் என்ன செய்யமுடியும் என்பதை பார்த்தால், அவர் சூப்பர் ஹியூமன் ஆவார்.
கோலிக்கு அடுத்த இடம் பாபர் அசாமுக்குத்தான். அருமையான பேட்ஸ்மேன் பாபர் அசாம். அவருக்குத்தான் இரண்டாமிடம். 3 ஆம் இடத்தில் ஸ்மித். ஸ்மித் இன்னும் மேலே இருக்க வேண்டியவர். முன்பு பவுலர்கள் மீது அவர் போட்ட அழுத்தத்தை போன்று இப்போது அழுத்தம் போடுவதில்லை. எனவே அவர் சற்று கீழிறங்கியுள்ளார். 4ஆம் இடத்தில் கேன் வில்லியம்சன், 5 ஆம் இடத்தில் ஜோ ரூட் என்றார்” என்று தெரிவித்தார்.