என்னாலையும் அதிரடியாக விளையாட முடியும்னு காட்டியது அந்த போட்டி தான் - விராட் கோலி!

Updated: Mon, Aug 28 2023 15:10 IST
Image Source: Google

ஆசிய கோப்பைத் தொடர் வரும் 30 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. தொடர் நெருங்க நெருங்க தொடர் குறித்தான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. காரணம் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட இருப்பதே. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு எந்த அளவு எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அதே அளவு எதிர்பார்ப்பு முன்னாள் வீரர்களிடமும் இருக்கிறது.

அதே சமயத்தில் இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, இருநாட்டு விளையாடும் வீரர்களுக்கும் அழுத்தமாக எப்பொழுதும் மாறிவிடும் என்பது அறிந்த விஷயமே. தற்பொழுதும் அப்படியான சூழ்நிலையே நிலவி வருகிறது. தற்பொழுது இந்திய அணி கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரத்திற்கு அருகில் இருக்கும் ஆலூரில், ஆசியக் கோப்பைக்காக ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை அமைத்து பயிற்சி பெற்று வருகிறது.

இந்த பயிற்சி முகாமில் விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாடி, பேட்டிங்கில் புதிய அணுகுமுறையைக் காட்டி வருகிறார். அதேசமயத்தில் அவர் ஸ்வீப் ஷாட் விளையாட மாட்டார் என்பதால், கிரீசில் உள்ளே தள்ளி நின்று கட் ஷாட் விளையாடி வருகிறார். தற்பொழுது பயிற்சியில் இருக்கும் விராட் கோலி, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற போட்டியில், 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்ததை வீழ்த்தி அணியை வெற்றி பெறவைத்தார்.

இதுகுறித்து பேசிய விராட் கோலி “நான் ஒரு ஒடிஐ இன்னிங்சில் இவ்வளவு ரன்கள் எடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அதுவும் சேசிங் செய்யும் பொழுது. அன்றைய தினம் நான் இயல்பாகவே வேறு ஒரு உலகத்தில் இருந்தேன். நான் எதையும் திட்டமிடாமல் உள்ளுணர்வின் அடிப்படையில் விளையாடினேன். போட்டியில் தொடர்ந்து முன்னேறும் பொழுது நான் இன்னும் வேறு உலகத்திற்கு சென்றேன்.

பின்னர் நான் கொஞ்சம் அதை ஆச்சரியமாக உணர்ந்தேன். என்னால் சதங்கள் அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். ஆனால் 180க்கும் மேலான ரன்கள் எடுத்தது எனக்கு பெரிய விஷயம். மேலும் பாகிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராக எடுக்கும் பொழுது அதன் மதிப்பு கூடுகிறது.

அது என்னுடைய திருப்திகரமான ஆட்டம் என்று கூறுவேன். அது இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை போட்டி. அதற்கு முன்பாக நான் அதிகம் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் விளையாடியது கிடையாது. எனக்கு அந்தப் போட்டியை கட்டி எழுப்புவது எப்படி என்பது குறித்து எந்த சிந்தனையும் அப்பொழுது கிடையாது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை