நல்ல ஃபார்மில் நீங்கள் இருக்கும் போது உங்களுடைய விக்கெட்டை பரிசளிக்க கூடாது - ஷுப்மன் கில்லிற்கு சேவாக் அட்வைஸ்!

Updated: Mon, Sep 25 2023 17:51 IST
நல்ல ஃபார்மில் நீங்கள் இருக்கும் போது உங்களுடைய விக்கெட்டை பரிசளிக்க கூடாது - ஷுப்மன் கில்லிற்கு சேவ (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே கேஎல் ராகுல் தலைமையில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளது.

அதனால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி 2023 உலகக் கோப்பையை வெல்ல தயாராக இருக்கிறோம் என்பதையும் காட்டியுள்ளது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளில் நட்சத்திர துவக்க இளம் வீரர் சுப்மன் கில் முதல் போட்டியில் 74 ரன்களும் 2ஆவது போட்டியில் சதமடித்து 104 ரன்களும் குவித்த முக்கிய பங்காற்றினர்.

கடந்த சில வருடமாகவே ஐபிஎல் தொடரிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் நிறைய சாதனைகளை படைத்து சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டிங்க்கு சாதகமான இந்தூர் மைதானத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் ஷுப்மன் கில் இரட்டை சதமடிக்கவில்லை என்று விரேந்தர் சேவாக் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக இதே மைதானத்தில் கடந்த 2011இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தாம் இரட்டை சதமடித்தது போல நேற்றைய போட்டியில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் அவர் தவற விட்டதாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே ஏற்கனவே இரட்டை சதமடித்திருந்தாலும் இது போன்ற வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் சர்மா போல அதிக இரட்டை சதங்கள் அடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த போட்டியில் தவற விட்ட சதத்தை இப்போட்டியில் அவர் அடித்துள்ளார். ஆனால் அவர் சதத்தை தாண்டி குறைந்தது 160 – 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று நான் சொல்வேன். ஏனெனில் வெறும் 25 வயது மட்டுமே நிரம்பிய அவர் 200 ரன்கள் அடித்தாலும் களைப்படைய மாட்டார். ஆனால் நீங்கள் 30 வயதை தொட்டு விட்டால் களைப்டைவீர்கள் என்பதால் இப்போதே பெரிய ரன்கள் குவிக்கும் முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக நல்ல ஃபார்மில் நீங்கள் இருக்கும் போது உங்களுடைய விக்கெட்டை பரிசளிக்க கூடாது. நேற்று அவர் அவுட்டான போது இன்னும் 18 ஓவர்கள் இருந்தது. ஒருவேளை இன்னும் 9 – 10 ஓவர்கள் விளையாடியிருந்தால் அவர் தம்முடைய 2வது இரட்டை சதத்தை அடித்திருப்பார். ரோஹித் 3 இரட்டை சதமடித்துள்ளார். மேலும் சேவாக் எனும் வீரர் இரட்டை சதமடித்த இம்மைதானம் எப்போதும் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கக்கூடியதாகும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை