டிராவிட்டிற்கு பின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் விவிஎஸ் லக்ஷ்மண்- தகவல்!

Updated: Fri, Oct 27 2023 11:48 IST
டிராவிட்டிற்கு பின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் விவிஎஸ் லக்ஷ்மண்- தகவல்! (Image Source: Google)

2023 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுவார் என்ற தகவலை பிசிசிஐ கசிய விட்டுள்ளது . இது நிரந்தரமான பதவியா? அல்லது தற்காலிக பதவியா? என்பது ராகுல் டிராவிட் கையில் தான் உள்ளது. உலகக்கோப்பை முடிந்த பின் டிராவிட் தன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு விடை பெறவும் வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீரர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி இருப்பார்கள் என்பதால் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது அணியில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கு நீண்ட ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதற்கு பதில் இளம் வீரர்கள் கொண்ட அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும்.

அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. ஆனால், இதில் ஒரு முக்கிய விஷயமும் உள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவு பெறுகிறது. இந்தியா உலகக்கோப்பை தொடரில் எந்த இடம் வரை செல்கிறது என்பதை பொறுத்து அவரது ஒப்பந்தம் நீட்டிப்பதா? அல்லது அவருக்கு விடை கொடுப்பதா? என பிசிசிஐ முடிவு செய்யும்.

அதே சமயம், தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் இடையே நல்ல புரிதல் உள்ளது. அந்த அடிப்படையில் பிசிசிஐ டிராவிட்டை தக்க வைக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நீண்ட காலம் இருப்பது அழுத்தத்தை அதிகரிப்பதாக கருதி விலகவும் வாய்ப்பு உள்ளது. அவரை ஐபிஎல் அணிகள் ஏற்கனவே தொடர்பு கொண்டு பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தி வருகின்றன. 

பிசிசிஐ ஒப்பந்தம் முடிந்தால் மட்டுமே டிராவிட், ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக செல்ல முடியும். இந்த நிலையில், பிசிசிஐ முன்னெச்சரிக்கையாக விவிஎஸ் லக்ஷ்மனை தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. ஒருவேளை டிராவிட் விலகினால், நிச்சயம் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் தான் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பில் இருக்கிறார் விவிஎஸ் லக்ஷ்மன். மேலும், டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போதெல்லாம் லக்ஷ்மன் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளம் அணியை அழைத்துச் சென்று தங்கம் வென்று கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை