மகளிர் ஆசிய கோப்பை 2022: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி!
ஏழு அணிகள் பங்கேற்கும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய மகளி அணி மலேசியா மகளிர் அணியைவை எதிர்கொள்கிறது.
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. மலேசியா அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மலேசிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா - மேகனா இணை களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை எதிரணி பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. அதன்பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய மேகனா அரைசதம் கடந்ததுடன், 69 ரன்களையும் சேர்த்து அசத்தினார். இறுதியில் ரிச்சா கோஷ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சபினேனி மேகனா 69 ரன்களையும், ஷஃபாலி வர்மா 46 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசிய அணியில் கேப்டன் வினிஃப்ரெட் துரைசிங்கம் ரன் ஏதுமின்றியும், வான் ஜூலியா ஒரு ரன்னுடனும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
இதனால் 5.2 ஓவர்களில் மலேசிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் இத்துடன் முடிக்கப்பட்டு, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதாக அற்விக்கப்பட்டது.