மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ், தீப்தி அரைசதம்; யூஏஇக்கு 179 டார்கெட்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - யூஏஇ மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மேகனா - ரிச்சா கோஷ் இணை களமிறங்கியது. இதில் மேகனா 10 ரன்களிலும், ரிச்சா கோஷ் ரன் ஏதுமின்றியும், ஹேமலதா 2 ரன்களோடும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியாது.
அதன்பின் 49 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்த தீப்தி சர்மா ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூஜா வஸ்திரேகரும் 5 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி 13 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 75 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது.