ஆசிய கோப்பை 2023: முக்கிய வீரர்களுக்கு காயம்; சிக்கலில் இலங்கை அணி!
ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இத்தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாள் உள்ளிட்ட அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.
இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31ஆம் தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில் முக்கிய வீரர்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் இலங்கை அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.