மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!

Updated: Wed, Jul 02 2025 22:08 IST
Image Source: Google

Sri Lanka vs Bangladesh 1st ODI: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். 

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் கேப்டன் சரித் அசலங்கா 106 ரன்களையும், குசால் மெண்டிஸ் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 244 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தன்ஸித் ஹசன் 62 ரன்களையும், ஜக்கார் அலி 51 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸின் விக்கெட்டை வநிந்து ஹசரங்கா வீழ்த்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கா 68 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது ஹசரங்கா 64 ஒருநாள் போட்டிகளில் 103 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேசமயம் இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனை அஜந்தா மெண்டிஸிடம் உள்ளது. அவர் 63 போட்டிகளில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்கள்

  • அஜந்தா மெண்டிஸ்: 63 போட்டிகள்
  • லசித் மலிங்கா: 68 போட்டிகள்
  • பர்வேஸ் மஹரூஃப்: 75 போட்டிகள்
  • முத்தையா முரளிதரன்: 76 போட்டிகள்
  • சுரங்கா லக்மல்: 77 போட்டிகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை