உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகும் ஹசரங்கா? இலங்கை அணிக்கு பின்னடைவு!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதுஒருபுறம் இருந்தாலும் நட்சத்திர வீரர்கள் காயம் என்பது ஒவ்வொரு அணிக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது.
அந்த வகையில் முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு இது மிகப்பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது. அதிலும் சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவந்த இலங்கை அணியில் தற்போது நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்காவின் காயம் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணிக்காக வநிந்து ஹசரங்கா 48 ஒருநாள் போட்டிகளில் 832 ரன்களும் 67 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு முக்கியமான ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். இதற்கு முன்பாக லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவரும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவருமாக ஹசரங்கா அசத்தினார். ஆனால் அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்தார் ஹசரங்கா.
இந்நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்தும் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் செப்டம்பர் 28ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி அணிக்கான கடைசி மாறுதல்களை அறிவிக்கலாம் என்பதால் இன்னும் 4 நாள்கள் இருக்கிறது.
ஏற்கனவே மஹீஷ் தீக்ஷானா ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஹசரங்காவின் இழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.