ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்!

Updated: Tue, May 07 2024 19:51 IST
ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்! (Image Source: Google)

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் கைகளில் உலகக்கோப்பையை பார்க்க விரும்புகிறேன் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் எனவும், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது.

 

ஏனெனில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து செல்ல ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினார். மேலும் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை. ஏனெனில் நமக்கு நல்ல கேப்டன் தேவைப்படுவதாக நினைக்கிறேன். ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன். அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர், அவரால் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர முடியும்” என்று தெரிவித்துள்ளார் 

முன்னதாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங், அத்தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனையை படைத்தார். அதுமட்டுமின்றி 2011ஆம் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த அவர், அத்தொடரின் தொடர்நாயகன் விருதையும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை