இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்!

Updated: Tue, Oct 24 2023 13:16 IST
இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்! (Image Source: Google)

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் ஆச்சரியத்தை கொடுத்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 74, அப்துல்லா ஷஃபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மது 3 விக்கெட்டுகள் செய்தார். அதைத்தொடர்ந்து சேசிங்கை தொடங்கிய ஆஃப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஸத்ரான் 87 ரன்கள் விளாசி 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 77 கேப்டன் சாகிதி 48 ரன்கள் எடுத்து 49 ஓவரிலேயே தங்களுடைய நாட்டை வெற்றி பெற வைத்தனர்.

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து ஆஃப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. மறுபுறம் சுமாரான ஃபீல்டிங், பவுலிங் காரணமாக ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் இத்தொடரில் 3ஆவது தோல்வியை சந்தித்தது.

அதை விட கத்துக்குட்டியாக கருதப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றதால் பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக இப்போட்டியை பொம்மி மப்வாங்கா மற்றும் மேத்தியூ ஹெய்டன் ஆகியோருடன் சேர்ந்து நேரலையில் வர்ணனை செய்த முன்னாள் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் தோற்ற தருணத்தில் பேச முடியாமல் வாயை மூடி கண்ணீர் விட்டார். 

இருப்பினும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய அவர் இது பாகிஸ்தான் அணியே கிடையாது மிகவும் மோசமாக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து பெசிய அவர், “இது வலியை கொடுக்கிறது. ஆனால் ஆஃப்கானிஸ்தானுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அவர்கள் வெற்றிக்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அழுத்தத்தை சரியாக கையாண்டு அவர்கள் சிறப்பாக விளையாடியதால் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால் பாகிஸ்தானின் இன்றைய செயல்பாடுகளை பார்த்து நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தெரிந்த பாகிஸ்தான் கிடையாது. ஏனெனில் இந்த அணியில் அணுகுமுறை ஜீரோவாக இருக்கிறது. அவர்கள் எந்த வழியையும் பின்பற்றாமல் பெயருக்காக பந்து வீசுவோம் என்பது போல் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணியை பற்றி இந்த இரவு முழுவதும் உட்கார்ந்து ஏராளமாக விமர்சிக்கலாம். ஏனெனில் அவர்கள் பேசுவதற்கு நிறைய வழங்கியுள்ளனர்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை