இனிமையான நினைவுகளுக்கு நன்றி - வார்னர் உருக்கம்!
ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே டேவிட் வார்னரின் பேட்டிங் ஃபார்ம் பெரிதளவில் இல்லை. முதல் சுற்றிலும் தொடர் தோல்விகளால் வெறுப்படைந்த வார்னர், கேப்டன் பதவியிலிருந்து விலகினார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் பேட்டிங்கில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மோசமாக ஆடியதால், அவரை அணியிலிருந்து நீக்கி பெஞ்ச்சில் அமரவைத்தனர்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு இரு புதிய அணிகள் வர இருப்பதால் மிகப்பெரிய ஏலம் நடக்க உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் இருப்பாரா எனத் தெரியாது. அதை சூசகமாக உணர்த்தி, வார்னர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்“அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு நன்றி. எங்கள் அணியை வழிநடத்தும் உத்வேகத்தை 100 சதவீதம் அளித்தது ரசிகர்களும், அவர்களின் ஆதரவும்தான். உங்களின் ஆதரவுக்கு நான் நன்றி கூறுதல் போதுமானதாக இருக்காது. மிகப்பெரிய பயணமாக அமைந்தது. என்னுடைய குடும்பமும், நானும் உங்களைப் பிரிந்து தவிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்திக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர் வார்னர். அதன்பின் பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் வார்னரால் பங்கேற்க முடியவில்லை. 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கலக்கிய வார்னர் 692 ரன்கள் குவித்தார். இதில் 8 அரை சதம், ஒரு சதம் அடங்கும். 2020-ம் ஆண்டிலும் சிறப்பாகச் செயல்பட்ட வார்னர் 548 ரன்கள் குவித்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்தான் வார்னருக்கு மோசமானதாக அமைந்தது, தொடர்ந்து 5 தோல்விகளால் கேப்டன் பதவியை உதறினார். ஒரு வீரராகத் தொடர்ந்தபோதிலும், பேட்டிங்கிலும் ஜொலிக்கவில்லை. இதனால் சன்ரைசர்ஸ் அணியில் வார்னரின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது இந்தப் பதிவை இன்ஸ்டாகிராமில் வார்னர் பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.