பாகிஸ்தானுடனான போட்டியில் ஆட்டமிழந்தது வருத்தமளித்தது - ஷுப்மன் கில்!

Updated: Tue, Sep 05 2023 14:10 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அது எப்பொழுதும் பேட்டிங்கை நம்பி விளையாடக்கூடிய ஒரு அணியாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. கவாஸ்கர், சச்சின், விராட் கோலி என்று அந்த பாரம்பரியம் தொடர்கிறது. கவாஸ்கர் காலத்திற்குப் பிறகு மாடர்ன் கிரிக்கெட்டில் மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய மாற்றத்தை துவங்கியவராக சச்சின் டெண்டுல்கர் முதலில் பதிவாகிறார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அதிக சதங்கள் என்று அவருடைய கொடி உயரப் பறக்கிறது.

இவருக்கு அடுத்து அந்த பேட்டிங் ஆயுதத்தை கையில் எடுத்த இந்தியராக விராட் கோலி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் செய்துள்ள சாதனைகளை முறியடிக்க வேகமாக பயணிக்க கூடிய ஒரே வீரராக தற்பொழுது விளையாடுவதில் அவர் மட்டுமே இருக்கிறார். இதற்கு அடுத்து இந்த இந்திய பேட்டிங் பாரம்பரியத்தை தொடரக்கூடிய வீரராக யார் இருப்பார் என்கின்ற பேச்சு தற்காலத்தில் பரவலாக இருந்து வருகிறது. விராட் கோலி ராஜா என்றால் அடுத்த இளவரசராக சுப்மன் கில் தான் வருவார் என்று பலரும் கருதுகிறார்கள்.

இந்தக் கணிப்புக்கு ஏற்ற வகையில் கில் உடைய பேட்டிங்கும் இருந்திருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் இரட்டை சதம் என்று அவருடைய கிராப் ஏறிக்கொண்டே சென்று இருக்கிறது. ஆனால் கடந்த மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இவருக்கு திடீரென ஒரு பேட்டிங் சரிவு உண்டானது. இவர் ஆட்டம் இழந்த முறை கவலை அழிக்க கூடியதாக இருந்தது. மேலும் இவர் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க ஆரம்பித்து இருந்தார். 

இது ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் நேபாள் அணிக்கு எதிராக 62 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். இதுகுறித்து ஷ்மன் கில் கூறும் பொழுது ” நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் ஆட்டம் இழந்த முறையில் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ரோஹித்துடன் சேர்ந்து ஆட்டத்தை முடிப்பது எனக்கு முக்கியமான ஒன்று. நாங்கள் அதை இந்த போட்டியில் செய்தோம்.

ரோகித் பந்துவீச்சாளர்களை காற்றில் அடிக்க விரும்பக்கூடிய ஒரு வீரர். நான் தரையோடு பவுண்டரி அடிக்க விரும்பும் ஒரு வீரர். இந்தக் கலவை எங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. நேபாள் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்களுக்கு சவாலாக இருந்தார்கள். பந்து ஈரம் ஆகியதும் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாகிவிடும் என்பது எங்களுக்கு தெரியும். ட்ரெஸ்ஸிங் ரூமில் எங்களுடைய திட்டம் இதுவாகத்தான் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை