எங்கள் அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ஃபசல்ஹக் ஃபரூக்கி!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி அவர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூகி 4 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் சார்பாக ரஹ்மத் ஷா, ஷாஹிதி, ஓமர்சாய் ஆகியோர் அரைசதம் அடித்து இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்து தன்னுடைய சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் ஃபசல்ஹக் ஃபரூக்கி, “இறைவனுக்கு நன்றி நாங்கள் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு கடந்த போட்டியில் விளையாடாத நான் மீண்டும் இந்த போட்டியில் விளையாட வந்து எங்கள் அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
புதுப்பந்தில் ஸ்விங் செய்து வீச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பந்து நான் நினைத்த அளவு ஸ்விங் ஆகவில்லை. எனவே தொடக்க ஓவர்களில் நல்ல ஏரியாவிலும், நல்ல லெந்த்திலும் பந்து வீசி பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய திட்டம். என்னுடைய பந்துவீச்சில் நான் பவுண்டரிகளை கொடுக்காமல் சரியான இடத்தில் மட்டுமே பந்துவீச நினைக்கிறேன். அப்படி பந்துவீசுவதால் எனக்கு விக்கெட்டுகளும் கிடைக்கிறது.
கடந்த போட்டியில் கடைசி சில ஓவர்களில் ரன்களை வழங்கி விட்டேன். அதன் காரணமாக இந்த போட்டிக்கு முன்பாக கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். மேலும் வலைப்பயிற்சியில் கச்சிதமாக எவ்வாறு வீசுவது, பல வேரியேஷங்களை எவ்வாறு போட்டியில் பயன்படுத்துவது என பல்வேறு விஷயங்களை பயிற்சி செய்து பழகிக்கொண்டேன். அதை எல்லாம் இது போன்ற போட்டிகளில் வெளிப்படுத்தி அதில் சிறப்பான செயல்பாட்டையும் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.