நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி

Updated: Wed, Jan 04 2023 09:54 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா 41 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்பின் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான பதும் நிஷன்கா வெறும் 1 ரன் மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் கால் பதித்த ஷிவம் மாவி தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தி கொடுத்ததன் மூலமும், இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷான்காவின் (45) விக்கெட்டை உம்ரன் மாலிக் சரியான நேரத்தில் வீழ்த்தி கொடுத்ததன் மூலம், கடைசி 2 ஓவருக்கு 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை இலங்கை அணி சந்தித்தது.

போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்காமல் அந்த ஓவரில் 16 ரன்கள் விட்டுகொடுத்ததன் மூலம் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இலங்கை அணி வந்தது. கடைசி ஓவரை விசீய அக்‌ஷர் பட்டேல் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு வொய்ட் விட்டுகொத்தாலும், கடைசி இரண்டு பந்துகளை சிறப்பாக வீசியதன் மூலம் கடைசி பந்தில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரன் மாலிக் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தநிலையில், இலங்கை அணியுடனான இந்த போட்டி குறித்து பேசிய ஷிவம் மாவி, இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடம் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய ஷிவம் மாவி, “19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளேன். இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது எனது பெரிய கனவு, சில நேரங்களில் எனது கனவு கனவாகவே போய்விடுவோ என்றும் அஞ்சியதுண்டு. 

ஆனால் இந்த 6 வருடங்கள் எனது கனவை அடைவதற்காக கடுமையாக உழைத்துள்ளேன். ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளதால், இந்த போட்டியில் எனக்கு பெரிய அழுத்தம் ஏற்படவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் முடிந்தவரை விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. எனது முதல் விக்கெட்டான பதும் நிஷான்காவை போல்டாக்கி வெளியேற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத விசயமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை