கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்!
தமிழகத்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். இவர் டிஎன்பிஎல் டி20 தொடரின் மூலம் தனது திறனை நிரூபித்து தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி.
இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டியில் இருமுறை அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் 9 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய வாஷிங்டன், 6 விக்கெட்டுகளும் 101 ரன்களும் எடுத்தார். பந்துவீச்சில் எகானமி - 8.54.
இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் காயம் காரணமாக தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் காயத்திலிருந்து குணமாகிவிட்ட வாஷிங்டன் சுந்தர், தற்போது பயிற்சிக்காக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார். அங்குள்ள லான்கஷைர் கவுன்டி அணிக்காக கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கவுன்டி ஆட்டங்களில் விளையாடி முழு உடற்தகுதியை நிரூபித்த பிறகே இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக முடியும் என்பதால் இம்முடிவை அவர் எடுத்துள்ளார் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.