‘ஒரே டெஸ்டில் 10 விக்கெட் ஹால் & செஞ்சுரி’ - ஆசையை வெளிப்படுத்தும் வாஷி
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். இவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 265 ரன்களை குவித்துள்ளார்.
தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பெற்று வரும் இவர் நிச்சயம் டெஸ்ட் அணியில் தனது இடத்தை நீண்டகாலத்திற்கு தக்க வைப்பார் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் செய்யவுள்ள சாதனை குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வாஷிங்டன் சுந்தர், “எனக்கு பிடித்த வீரர் என்றால் அது லாரா தான். அவருடைய பேட்டி எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதேபோல் பிடித்த இந்திய வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி மட்டும் தான்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் படைக்க விரும்பும் சாதனையானது, ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது மட்டுமின்றி பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்பது தான். நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இச்சாதனையை நிகழ்த்துவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய வீரர்களில் யாரும் இதுவரை ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10 விக்கெட் மற்றும் 100 ரன்களை அடித்த வீரர்களாக ஒரு சிலரே உள்ளனர்.
அவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் இயான் போத்தம், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தானின் இம்ரான் கான் ஆகியோர் மட்டுமே இச்சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தரும் இச்சாதனையை நிகழ்த்த வேண்டுமென தற்போது கங்கணம் கட்டியுள்ளார். அவரது விருப்பம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.